-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆத்துமாவுக்கும் ஆவிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? - கிறிஸ்தவ கேள்விகள் மற்றும் பதில்கள்

 


உங்கள் வாழ்க்கைக் கண்ணோட்டத்தையே திருப்பிவிடுகிற கேள்வியாக அமைந்திருக்கிறது. நாம் ஆராதிக்கிற தேவன் எவ்வளவு அற்புதமானவர் என்பதை இன்னும் ஆழமாக, அழுத்தமாக உணர்த்துவிக்கும் பதிலை உள்ளடக்கிய கேள்வி இது.  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

தேவன் மனிதனை திரித்துவமாகப் படைத்தது போலவே, நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்திலும் திரித்துவம் இருப்பதைக் காணமுடியும். "திரித்துவம்" என்றால், ஒன்றில் மூன்று; மூன்றில் ஒன்று. ஒன்றை விட்டு மற்றதைப் பிரிக்க முடியாது. அதே சமயம், ஒன்றைவிட்டு மற்றொன்று தனிப்பட்ட விதத்தில் செயல்படும். ஒரே நேரத்தில் சேர்ந்தும், பிரிந்தும் இருந்து செயல்படுவதுதான் திரித்துவம். அந்த அடிப்டையில் நாம் பார்க்கும்போது, நம் சரீரத்தில் திரித்துவம் இருப்பதையும், ஆத்துமாவில் திரித்துவம் வேலை செய்வதையும், ஆவியில் திரித்துவமாய் விளங்குவதையும் காணமுடியும்.

முதலாவது சரீரம்:

மனித சரீரம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அந்த மூன்றையும் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்கலாம்; அதே நேரம் மூன்றையும் பிரிக்க முடியாததாகவும் உள்ளது; அப்படிப் பிரித்தால் மனிதன் உயிர்வாழ முடியாது.

Ø  எலும்பு (bone)

Ø  மாமிசம் (flesh)

Ø  இரத்தம் (blood)

இந்த மூன்றையும் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியுமா? முடியும். ஆனால், பிரித்தால் என்ன ஆகும்? மனிதன் உயிரோடு இருக்க முடியாது. எலும்பை தவிர்த்து, மாம்சமும், இரத்தமும் கொண்ட மனிதனைப் பார்த்ததுண்டா? அல்லது மாம்சத்தைத் தவிர்த்து, வெறும் எலும்பையும், இரத்தத்தையும் கொண்ட மனிதனைப் பார்த்ததுண்டா? அல்லது இரத்தத்தை விட்டுவிட்டு, வெறும் எலும்பும் சதையும் கொண்ட மனிதன் இந்த உலகில் உண்டா?

இதைப்போலத்தான் திரித்துவ தேவனும். திரித்துவ தேவனில் உள்ள மூன்று நபரையும் ஒருவரைவிட்டு ஒருவரைப் பிரிக்க முடியாது. அதே நேரத்தில் மூவரையும் தனித்தனியாக நாம் விளக்க முடியும்; அறியமுடியும்; மூவரும் தனித்தனியாக கிரியை செய்யக்கூடியவர்கள்; ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை.

இரண்டாவது ஆத்துமா:

மனித ஆத்துமாவில் மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றையும் ஒன்றையொன்று தனித்தனியாகப் புரிந்துகொள்ள முடியும்; தனித்தனியாக வேலைசெய்யக்கூடியது; அதேநேரம், அவற்றை ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாது.

Ø  சுய சித்தம் (விருப்பம்) self -will (self-desire)

Ø  அறிவு (புத்தி, ஞானம்) intellect (knowledge)

Ø  உணர்ச்சி (செயல்தூண்டல்) emotions (feelings, expressions)

இந்த மூன்றும் சேர்ந்ததுதான் ஆத்துமா. ஆத்துமாவை உடைய ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமாக சிந்திக்கிற ஆற்றல் இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் தன்னிச்சையாக எதையும் யோசிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவர்கள். நாம் யோசிப்பது சரியா? தவறா? நல்லதா? கெட்டதா? நமக்கு அவசியமா? அவசியமற்றதா? அதைச் செய்யலாமா? செய்யக்கூடாதா? என்றெல்லாம் நம் அறிவு என்கிற சிந்தனைப் பகுதியில் போட்டு அவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கிறோம். அறிவைப் பயன்படுத்துவதால், நாம் எதை நினைக்கிறோமோ அதை நாம் செய்வதில்லை. நம் சுயசித்தம் அல்லது சுயவிருப்பத்தில் யோசித்து, சுய அறிவில் சிந்தித்து முடிவெடுக்கிறோம். அதை நாம் செயல் வடிவில் கொண்டுவருகிறோம். இதுதான் உணர்ச்சியின் வெளிப்பாடு, செயல்வடிவம்.

உதாரணமாக, நான் எனக்காக ஒரு உடை (பேண்ட், சர்ட்) வாங்க விரும்புகிறேன். நான் ஒன்றை வாங்கவேண்டுமென்ற விருப்பத்தை யாரும் எனக்குள் போடுவதில்லை; திணிப்பதில்லை. எனக்குள் அந்தத் திறனை, ஆற்றலை தேவன் வைத்துள்ளார் (அதுதான் தேவசாயல்). உடை வாங்கவேண்டுமென்ற விருப்பம் எனக்குள் எழும்போது, எனக்குள் என்ன நடக்கிறது? என் அறிவைப் பயன்படுத்தி நான் சிந்திக்கத் துவங்குகிறேன்; எங்கே வாங்கலாம்? எவ்வளவுக்கு வாங்கலாம்? என்னிடம் எவ்வளவு பணம் உள்ளது? எப்போது வாங்கலாம்? எப்படி இங்கிருந்து கடைக்குப் போவது? யாரைக் கூட்டிக்கொண்டு போகலாம்? இன்றைக்குப் போனால் அந்தக் கடை இருக்குமா? எந்த நேரம் டிரஸ் எடுக்க உகந்த நேரம்? இப்படி பல காரியங்களை நான் சிந்தித்து, அதன் பின்புதான் நான் முடிவெடுக்கிறேன்; இது என் அறிவு செய்கிற வேலை.

நான் முடிவு செய்தபின்பு, என் உணர்ச்சிப் பகுதிக்குச் சென்று நான்  செயல்வடிவம் கொடுக்கிறேன், நான் தயாராகிறேன், உடைஉடுத்துகிறேன், பணத்தை (அல்லது .டி.எம் கார்டை) எடுத்து என் பாக்கெட்டில் போடுகிறேன்,பைக் அல்லது காரை எடுக்கிறேன், என் நண்பனை அழைத்துக்கொண்டு நேராக எந்தக் கடைக்குப் போவேன் மளிகைக் கடைக்கா? பாத்திரக் கடைக்கா? இரும்புக் கடைக்கா? இல்லை... துணிக்டைக்கு; ஏன்? என் அறிவு எனக்குச் சொல்லிக்கொடுக்கிறது "எனக்குத் தகுந்த உடை கிடைக்கும் அந்தக் கடைக்குப் போ' என்று. அங்கே போகிறேன், எனக்கேற்ற ஒரு நல்ல உடையைத் தெரிந்தெடுக்கிறேன், திரும்ப வருகிறேன். இப்பொழுது என் விருப்பம் நிறைவேறுகிறது; என் அறிவு எனக்குச் சொல்லுகிறது "நல்ல டிரஸ், உனக்கேற்ற உடை, நல்ல உடை விலை மலிவாகக் கிடைத்துள்ளது அல்லது கொஞ்சம் விலை கூடத்தான், பரவாயில்லை, தரமான உடை இப்படி என் விருப்பம், அறிவு, உணர்ச்சி மூன்றும் இணைந்து செயல்படுகிறது, இதுதான் ஆத்துமா.

மேற்கண்ட இந்த உதாரணம் எதிர்மறையான, தீய (கெட்ட) செயல்களுக்கும் பொருந்தும். இப்படி நம் ஆத்துமாதான் நம் சரீரத்தை இயக்குகிற கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது. சரீரத்தின் செயல்பாடுகள் நம் விருப்பத்தில் ஆரம்பிக்கின்றன; நம் அறிவுக்குள் அலசி ஆராய்ந்து முடிவெடுக்கப்படுகின்றன; உணர்ச்சி என்ற பகுதிக்குக் கடத்தப்பட்டு அது செயல்வடிவம் பெறுகின்றன.

"சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக.... அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு. சோதிக்கப்படுகிறான்; பின்பு இச்சையானது கர்ப்பம் தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்." (யாக்கோபு 1:13-15)

இது நமக்குள் பாவமும் அதன் விளைவாக மரணமும் உண்டாவதற்கான எடுத்துக்காட்டு. இதை அப்படியே நேர்மறையாக மாற்றுவோம். அவனவன் தன் தன் சுய விருப்பத்தை தேவனுக்குப் பிரியமானபடி மாற்றி, அதை வேத வசனத்தின் அடிப்படையில் சிந்தித்து, தியானித்து செயல்வடிவத்தில் வாழும்போது அது நீதியையும், பரிசுத்தத்தையும் நமக்குள் உண்டாக்கும்; நீதியும், பரிசுத்தமும் பூரணமாகும்போது ஜீவனைப் பிறப்பிக்கும். ஆத்துமா நம் சரீரத்தை பாவம் செய்யவும், அக்கிரமத்தையும், அநீதியையும் செய்வதற்குக் காரணமாகவும் நடத்தமுடியும்; அல்லது, பரிசுத்தத்தை, நீதியை, உண்மையை காக்கும்படியும் நடத்தமுடியும். இது ஆத்துமாவின் வேலை. எனவே, ஆத்துமாதான் பாவ சுபாவத்தை உடையதாக, பாவத்தைச் செய்யக் காரணமானதாக இருக்கிறது. அது நம் விருப்பத்தில் ஆரம்பித்து, சிந்தையில் வளர்ந்து, உணர்ச்சி மண்டலத்தில் செயல்வடிவம் பெறுகிறது. சரீரம் பாவ சரீரமாக மாற்றப்படுகிறது. நாம் சரீரத்தில் செய்யும் பாவத்திற்கு நம் சரீரம் காரணம் அல்ல, நம் ஆத்துமாவே காரணம்.

இங்கே மற்றொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும் . "மனம்" (mind) என்றால் என்ன? என்பது குறித்து அநேகருக்கு சந்தேகம் எழும். சிலர் மனம் என்பது ஆத்துமாவின் இன்னொரு பகுதி என்பர். மனம் என்பது நம்முடைய இருதயம் என்பார்கள். மனம் என்பது நம் ஆத்துமாதான் என்று சொல்லும் மக்களும் இருக்கிறார்கள். "மனம்" (mind) என்பது நம் சுய- விருப்பமும், சுயஅறிவும் இணைந்ததுதான் மனம். நம்முடைய விருப்பங்களும், நம் சிந்தனைகளும் சரியாக இருக்கும்போது, மனம் சந்தோஷம் அடைகிறது. அது எதிர்மறையாக மாறும்போது துக்கமடைகிறது. Mind என்ற ஆங்கிலப் பதத்திற்கு இணையான தமிழ் வார்த்தை மனம் அல்ல. வேதத்தில் "மனம்" என்பது இருதயத்திற்கு உள்ளாக அமைந்திருக்கும் ஆவிக்குத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இங்கே mind என்பதை அறிவு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அதாவது, சுய விருப்பமும், சுய சிந்தனையும் (அறிவு) இணைந்து செயல்படுவதுதான் mind.

மூன்றாவது ஆவி:

 மனித ஆவியும் மூன்று பகுதிகளைக் கொண்டது.

Ø  உள்ளுணர்வு (intuition)

Ø  மனசாட்சி (Conscience)

Ø  ஐக்கியம் (communion or fellowship)

ஆவியை தேவன் நமக்குள் வைத்ததற்கான முக்கிய நோக்கமே தேவன் மனிதனோடு இடைபடவேண்டும், பேசவேண்டும், உறவாடவேண்டும் என்பதற்காகத்தான். தேவன் ஆவியாயிருக்கிறார் என்றால், மாம்சமும், சதையும் உள்ள காணக்கூடிய உலகத்தில் வாழும் மனிதனிடம் தேவன் எப்படி உறவாட முடியும். சரீர மனிதன் சரீரத்தை உடைய இன்னொரு மனிதனிடம் உறவாட முடியும்; ஆனால், ஆவியாயிருக்கிற தேவனிடம் எப்படி? அதனால்தான், ஆவி என்ற ஒரு பகுதியை தேவன் நமக்குள் வைத்து, அதன் மூலம் நம்மோடு பேசவும், உறவாடவும், நம்மோடு ஐக்கியம் கொள்ளவும் விரும்புகிறார்.

ஆவியின் முதல் பகுதியான உள்ளுணர்வில்தான் தேவன் நம்மோடு பேசுகிறார். அமர்ந்த மெல்லிய சத்தத்தின் மூலம் தேவன் இங்கே பேசமுடியும். இது நமக்குள் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிறிய ஒலி பெருக்கி போன்றது (speaker). காணாத உலகிலுள்ள தேவன் பேசுவதை நாம் காணக்கூடாத பகுதியில் உள்ள உள்ளுணர்வில் கேட்க முடியும். இதற்கு நம் ஆவியும், ஆத்துமாவும் மிகுந்த உணர்வுள்ளதாக (sensitive) இருப்பது அவசியம். இதுதான் ஆவியிலுள்ள காது. நம் சரீர காதுகளின் வழியாக இந்த உலகிலுள்ளவைகளின் சத்தத்தைக் கேட்கிறோம், ஆவியிலுள்ள காதாகிய உள்ளுணர்வின் மூலம் தேவன் நம்மோடு பேசுவதைக் கேட்க முடியும். அதனால்தான் தேவன், "ஆவியானவர் பேசுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்கிறார். அதாவது உள்ளுணர்வில் மிகுந்த sensitive ஆக இருந்தால் ஆவியானவரின் சத்தத்தைக் கேட்க முடியும்.

அப்படி ஆவியாகிய தேவன் பேசும்போது, அதைக் கேட்டு நடந்தால், நம்முடைய மனசாட்சியில் ஒரு திருப்தியும், விசுவாசமும், நம்பிக்கையும், சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். ஆவியில் தேவனோடு ஐக்கியம் கொண்டு உள்ளுணர்வில் பேசுவதைக் கேட்டு நடக்கும் தேவப் பிள்ளைகள் இந்த உலகில் எந்த கஷ்டம் வந்தாலும் சோர்ந்துபோகமாட்டார்கள். சந்தோஷமும், மகிழ்ச்சியும், நம்பிக்கையும் உள்ளவர்களாக இருப்பார்கள்; கலங்கமாட்டார்கள், பதறமாட்டார்கள், மிகுந்த சமாதானத்தோடு இருப்பதை நாம் காணமுடியும். ஜென்ம சுபாவமுள்ள மனிதர்கள் அவர்களைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். (1 கொரி. 2:9 - 15)

ஆவியானவர் பேசுகிறதை நாம் கேட்காமல்போனால், நம் மனதில் பெரிய பாரம், துக்கம், இனம் புரியாத பயம், குற்ற உணர்வு இருப்பதை உணரமுடியும்.

நம் ஆவிக்குள் தேவன் பேசும்போது, அதை கேளாமல் தட்டிக் கழிப்போமானால், நம்முடைய மனசாட்சி நம்மை குற்றப்படுத்தும். தேவன் பேசும்போது அதற்குக் கீழ்ப்படிந்தால், மனசாட்சி மகிழ்ச்சிகொள்ளும். அதைக் கேளாமல், கீழ்ப்படியாமல் போகும்போது மனசாட்சி நம்மைக் குத்தும்.... குற்ற உணர்வுக்குள் நடத்தும். உடனடியாக அதைச் சரிசெய்வது அவசியம். அதற்கு மன்னிப்பு கேட்டு தேவனோடு நல்மனம் பொருந்துவது சாலச்சிறந்தது.

                மனசாட்சி நம்மைக் குற்றப்படுத்தும்போது, நம்மை எச்சரிக்கும்போது, பாரமும், துக்கமும் நமக்குள் வரும்போது அதைப் பொருட்படுத்தாமல் ஒருமுறை தட்டிக் கழித்தால், அடுத்த முறை மனசாட்சியின் எச்சரிக்கை, துக்கம், குற்றமனசாட்சி முந்தைய அளவுக்கு இருக்காது. இரண்டாவது முறை அதைவிடக் குறைந்துபோகும், மூன்றாவது முறை மனசாட்சியில் உறுத்துதலை கால்வாசிதான் உணரமுடியும். இதைத் தொடர்ந்து செய்துகொண்டேயிருந்தால், கீழ்ப்படியாமல் மனசாட்சியை போட்டு அமுக்கிக்கொண்டேயிருந்தால், கடைசியில் அது சூடுண்ட மனசாட்சியாக, மரத்துப்போன மனசாட்சியாக, செத்த மனசாட்சியாக மாறிவிடும். பிறகு என்ன தவறு செய்தாலும், பாவமே செய்தாலும் நம் மனசாட்சி நம்மை எச்சரிக்காது. மனக்கடினமுள்ளவர்களாக மனிதர்கள் மாறிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம் என்று வேதம் சொல்லுகிறது. (எபி. 6:4; 10:26-29 தயவுசெய்து இந்த வசனப் பகுதிகளைப் படிக்கவும்)

தேவன் நம்முடைய உள்ளுணர்வில் பேசும்போது, அதற்குக் கீழ்ப்படிந்து அதன்படி நடக்கும்போது, தேவன் நம்முடைய ஆவியில் வாசம் செய்வதையும், நம்மோடு ஐக்கியம் கொண்டிருப்பதையும், அவர் நமக்குள் இருப்பதையும், நம்மை நடத்துவதையும் நாம் உணரமுடியும், அதுதான் ஐக்கியம்.

1 கொரிந்தியர் 3:16: ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணுகிறார்

1 கொரிந்தியர் 6:19: நாம் ஆவியாகிய தேவன் தங்கும் ஆலயமாயிருக்கிறோம்

2 கொரிந்தியர் 6:16:  நமக்குள்ளே உலாவி, நமக்குள்ளே வாசம்பண்ணுகிற தேவன்

ரோமர் 8:13 - 141: நாம் ஆவியினாலே நடத்தப்படுகிறவர்கள்

நம்முடைய ஆவியில் தேவனோடு ஐக்கியம் கொண்டு வாழுகிறவர்களாய் இருக்கும்போது, நாம் "ஆவிக்குரியவர்கள்" என்று அழைக்கப்படுகிறோம். ஆவியினாலே நடத்தப்படாமல், நம் ஆத்துமாவில் சுயவிருப்பத்தில், சுய அறிவில், சுய உணர்வுகளில் நடத்தப்படும்போது, நாம் மாம்சத்துக்குரியவர்கள் என்று அழைக்கப்படுகிறோம். தேவனை ஏற்றுக்கொள்ளாத அவிசுவாசிகள் ஜென்ம சுபாவத்தினால் நடத்தப்படுவதினால், அவர்களை "ஜென்ம சுபாவமுடையவர்கள் என்று வேதம் அழைக்கிறது (1 கொரி. 3:1-4; 2:14). நாம் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

- சகோ. கிரிஸ்டோபர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்